7. பாடிய ஆழ்வார்கள்
இத்தலத்தையும் இவ்வெம்பெருமானையும் நம்மாழ்வார்(11 பாசுரம்), திருமங்கையாழ்வார்(34 பாசுரம்) பொய்கையாழ்வார் (1 பாசுரம்), பேயாழ்வார் (2 பாசுரம்) என்ற நான்கு ஆழ்வார்கள் மங்களாசாஸநம் செய்தருளியுள்ளனர்.( மொத்தம் 48 பாசுரங்கள்).
8.திவ்ய தேசத்தின் தனிப்பெருமை
நம்மாழ்வார் எம்பெருமானைப் பிரிந்து வருந்தி நின்ற நிலையில் இத்தலத்து எம்பெருமான் தானே மேல் விழுந்து ஆழ்வாரை அணைத்துக்களித்த தலமாதலின், இதை எந்நாளும் பிரியாது எம்பெருமான் இங்கு நித்யவாஸம் செய்வதாய் முன்னோர்களான ஆசிரியர்கள், ஆழ்வார் பாசுரத்துக்கு உரை கண்டனர். பின்னும் நம்மாழ்வார் இத்தலத்துக்குத் தாம் பாடிய திருவாய் மொழிப் பதிகத்தில் ஒன்பது பாசுரங்களில் முரண்பாடுள்ள பொருள்களைப் பேசி அவற்றுக்கு அந்தாயாமியாய் எம்பெருமான் நிற்பதால், சேராத பொருள்களை சேர்க்கும் பெருமையன் என்று பாடியுள்ளார். மேலும் திருமங்கையாழ்வார் பாடிய இத்தலத்தின் முப்பதிகங்களில் முதலாமதில் ஒன்பது பாசுரங்களில் முற்பகுதியில் எம்பெருமானது பெருமையைக் கூறி அவனை அழைத்துப்பிற்பகுதிகளில் அவனைக் காணும் பேற்றை அருளினால் ம்னைவாழ்க்கையை வேண்டவில்லையென்று ஒரே வகையான விசித்திரக் கவிகளால் பாடியுள்ளார்.
|